1,495 குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்பு: ஏடிஜிபி சைலேந்திர பாபு தகவல்

by SAM ASIR, Oct 9, 2018, 21:01 PM IST

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களில் தவறவிடப்பட்ட 1,495 குழந்தைகள் இந்த ஆண்டு மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் 'ரயில்வே துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்' பற்றிய ஒருநாள் பயிற்சி பட்டறை திங்கள்கிழமை நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

"இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இதுவரை ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்கள் பற்றி 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரு நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதால் இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. ரயில்வே காவல்துறையினர் மீது பயணிகள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடக்கைகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும், அவ்வழக்குகளையும் புலன்விசாரணைகளையும் நடத்துவது குறித்தும் இப்பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.

2017ம் ஆண்டு 1,940 குழந்தைகள் பல்வேறு ரயில் நிலையங்களிலிருந்து மீட்கப்பட்டு பெற்றோர் மற்றும் உரியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரைக்கும் 1,495 சிறுவர் மற்றும் சிறுமியர் ரயில் நிலையங்களில் அலைந்து திரியும்போது மீட்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் 200 காவலர்கள் ரயில்வே காவல் பணிக்கு புதிதாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 90 பேர் பெண் காவலர்கள் ஆவார்கள்," என்று தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சி பட்டறையில் கோயம்புத்தூர் நகர காவல் ஆணையர் சுமித் சரணும் கலந்து கொண்டார்.

You'r reading 1,495 குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்பு: ஏடிஜிபி சைலேந்திர பாபு தகவல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை