சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை பரங்கிமலையில் மின்சார ரயில் விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியானதை அடுத்து, மெட்ரோ ரயில்களை போன்று புறநகர் ரயில்களிலும் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெற்கு ரயில்வே சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவு பொருத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகள் பொருத்துவது சாத்தியம் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
சென்னையின் தட்பவெப்பநிலையில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பட்சத்தில் காற்றோட்டம் இருக்காது எனவும் தானியங்கி கதவுகள் பொருத்தினால் அனைத்து புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதி செய்ய வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மும்பையில் 6 மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி கதவுகள் கொண்ட ரயில்களில் கட்டணம் சென்னையை விட, 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக மனுவில் கூறப்பட்டது.
டெல்லியில் உள்ள ரயில்வே வாரியமும், லக்னோவில் உள்ள ரயில்வே வடிவமைப்பு கழகமும் இணைந்து ரயில் பெட்டிகள் வடிவமைப்பை மாற்றுவது குறித்து எடுக்கும் முடிவு தெற்கு ரயில்வேயின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை புறநகர் ரயில்கள் அனைத்திலும் தானியங்கி கதவு பொருத்துவதற்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும் எனவும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.