கூடுதல் விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உறுதி

Coal imports are not being imported by the Tamil Nadu Electricity Board

by Isaivaani, Oct 12, 2018, 08:55 AM IST

வெளிநாட்டில் இருந்து கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமி செய்யவில்லை என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டெண்டர் இல்லாமல் தனியார் நிறுவனத்திடம் நிலக்கரியை ‘கோல் இந்தியா’ நிறுவன விலையான டன்னுக்கு ரூ.2 ஆயிரம் என்ற அளவில் இல்லாமல் 150 சதவீதம் அதிக விலை கொடுத்து, அதாவது ரூ.33 கோடி அதிகமாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வாங்குவதாக செய்தி வெளியாகி உள்ளது.

‘கோல் இந்தியா’ நிறுவனத்திடம் இருந்து வாங்கும் நிலக்கரிக்கும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கும் இடையே தரத்தில் வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மொத்த கலோரி வெப்ப அளவு, ஈரப்பதம் அளவு, சாம்பல் அளவு போன்றவை ஆகும்.

இந்திய நிலக்கரியில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியைவிட குறைந்த கலோரி வெப்பம், அதிக சாம்பல், குறைந்த ஈரப்பதம் இருக்கும். எனவே குறைந்த தரம் உள்ள நிலக்கரியுடன், உயர்ந்த தரம் உடைய நிலக்கரியை ஒப்பிட முடியாது. அதே வகையில் தான் அதற்கான விலையையும் ஒப்பிட வேண்டும்.

இந்திய நிலக்கரி ஒரு டன் ரூ.2 ஆயிரம் என்பது இந்திய சுரங்கங்களில் இருந்து வாங்கும் விலை தான். அதன்பின் அதை ரெயில் மூலம் அருகில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டுசென்று கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்க்க ஒரு டன்னுக்கு கூடுதலாக ரூ.1,655 செலவாகிறது. எனவே இந்திய நிலக்கரி விலை ஒரு டன் ரூ.3,655 ஆகும்.

இந்திய நிலக்கரி தரத்துக்கு இணையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி விலை ஒரு டன் ரூ.3,150 தான். ஆக ஒரு டன்னுக்கு ரூ.505 குறைவாக இருக்கிறது. இந்த கணக்குபடி தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி மூலம் ரூ.33 கோடி நஷ்டம் என்ற குற்றச்சாட்டுக்கு மாறாக ரூ.5.56 கோடி மிச்சமாகிறது.

தமிழக அரசின் ஆலோசனைக்கு பிறகு கனமழை, ஒடிசா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி ஏற்றும் துறைமுகங்களில் புயல் பாதிப்பு, அனல் மின்நிலையங்களில் குறைவான நிலக்கரி இருப்பு, 3 தனியார் நிறுவனங்கள் விதித்த விலை ஆகியவைகளை கருத்தில்கொண்டு நிலக்கரி இறக்குமதி செய்ய ஒருநேர விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் நிலக்கரி விலை சர்வதேச நிலக்கரி விலையைவிட ரூ.76 லட்சம் குறைவாக இருக்கிறது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு ஆண்டுக்கு 2 கோடியே 45 லட்சம் டன் நிலக்கரி தேவை. இந்திய நிலக்கரி சப்ளை ஒரு கோடியே 50 லட்சம் டன் அளவுக்கு தான் இருக்கிறது. எனவே நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதி தான் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சமீபத்தில் 17.5 லட்சம் டன் நிலக்கரியை ‘இ-டெண்டர்’ வழியாக நாட்டிலேயே மிக குறைந்த விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள இறக்குமதி சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.139 கோடி மிச்சப்படுத்தப்படுகிறது.

இதுபோல அரசு பிறப்பித்துள்ள அரசாணை மூலம் அவசரத்துக்காக தனியார் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி நிலக்கரி வாங்குவது 1.10 லட்சம் டன் தான். நமது மொத்த தேவையில் 0.45 சதவீதமான இது 2 நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.33 கோடி அதிகமாக விலை கொடுத்து நிலக்கரி வாங்கவில்லை. ரூ.5.56 கோடி குறைவான விலையில் தான் வாங்கப்பட்டு இருக்கிறது. நிலக்கரியால் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading கூடுதல் விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உறுதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை