டிடிவி தினகரனை போன்று ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தோற்கடித்து, சுயேட்சையாக நின்று டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார்.
இதனையடுத்து இன்று டிடிவி தினகரன் சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது அவர் சசிகலாவின் அதிமுகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்றும் பதவி கொடுத்தவர்களை ஒதுகிவிட்டார்கள் என்றும் கூறினார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக அரசு மீது தவறு கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் திட்டமிட்டு வீன் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர். டிடிவி தினகரனை போன்று ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
பதவி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் கட்சி பொறுப்பிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முத்தலாக் குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தெளிவாக பேசியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.