பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் இது வரையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி மாவட்ட தலைகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ரேஷன் கடைகள் மூடப்பட்டால் அந்த கடைகளை மட்டுமே நம்பி இருக்கின்ற கிராமம் மற்றும் நகர்புற பகுதி வாழ் ஏழை, எளிய மக்கள் தான் சிரமத்திற்கு ஆளாகியுள்ளர்.
உடனடியாக ரேஷன் கடை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.