சேலத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும், குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்திரி (31) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டது. இதானல், பாலமுருகனை விட்டு காயத்திரி அவரது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு தனது இரண்டு மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக காயத்திரி தனது ஸ்கூட்டரில் அழைத்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென எதிரே வந்த நபர் ஒருவர் காயத்திரியை வழிமறித்து அவரது முகத்தில் ஆசிட் வீசினார்.
இதில், காயத்திரியின் முகத்தில் வலது பக்கம், நெஞ்சு, கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிட் தெறித்தது. வலி தாங்க முடியாமல் துடித்த காயத்திரியை மீட்ட பொது மக்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், காயத்திரி மீது ஆசிட் வீசியது, பக்கத்து தெருவை சேர்ந்த சீனிவாசன் (40) என்பது தெரியவந்தது.
மரம் அறுக்கும் தொழில் செய்து வரும் சினிவாசனுக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், காயத்திரிக்கும், சீனிவாசனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காயத்திரியின் பெற்றோருக்கு தெரியவர, காயத்திரியை அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால், காயத்திரி சீனிவாசனிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இருப்பினும், காயத்திரியை பின்தொடர்ந்து தன்னிடம் ஏன் பேச மறுக்கிறாய் என்று சீனிவாசன் தொடர்ந்து கேட்டு நச்சரித்து வந்துள்ளார். ஆனால், காயத்திரி இதற்கு பதில் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சீனிவாசன், காயத்திரியை பின்தொடர்ந்து பழிவாங்கும் எண்ணத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சீனிவாசதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.