சென்னை வில்லிவாக்கம் அருகே குழந்தையை ஏற்றிக் கொன்ற தண்ணீர் லாரியை பிடித்துக் கொண்டு தாய் பின்னால் ஓடிய சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் கலைவாணன்-லட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். லட்சுமி 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை மோகித் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உணவு கொடுப்பதற்காக லட்சுமி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி, குழந்தை மோகித் மீது ஏறியது. தாய் லட்சுமி கண் முன்னே குழந்தை உயிரிழந்தது. பதறிபோன லட்சுமி குழந்தையின் சடலத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, நிற்காமல் சென்ற தண்ணீர் லாரியை பிடித்துக் கொண்டு பின்னால் ஓடினார். லட்சுமியின் தாய் பாசம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
உடனடியாக அங்கு திரண்ட பொதுமக்கள், லாரியை மடக்கி பிடித்த அடித்து நொறுக்கினர். ஓட்டுநரையும் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மது போதையில் லாரி ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.