நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்றபுதிருக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு விடையாக, தனி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அவர் ஞாயிறன்று அறிவித்தார்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்புக்கு கடந்த ஆறு நாட்களாக அவர் ஏற்பாடு செய்துவந்தார். இந்த சந்திப்பின் நிறைவில் ரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி, வரும் சட்டமன்றத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கூறினார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார், “ரஜினி காந்தின் அரசியல் வருகையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மதவாதஅரசியலாக இல்லாமல் ஆன்மீக அரசியலாகஇருக்கும் என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.”
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், “புதிதாக கட்சியை தொடங்கும்போது கொள்கை, செயல்முறை என்ன, எதை நோக்கி பயணம் செய்கிறார் என்பதை பொறுத்து தான் மக்களிடம் அங்கீகாரம் பெறமுடியும். ரஜினி ஆன்மீக அரசியல் என்று சொல்வது அவருடைய குழப்பத்தை காட்டுகிறது.
ஆன்மீகத்தையும் அரசியலையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. முதலில் அவருடைய ஆன்மீக அரசியலை தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு பகுத்தறிவு பூமி. இந்த வேர்களை வெட்டுவதற்கு எந்த சக்திகள் முனைந்தாலும், அந்த சக்திகளை காலூன்றாமல் தடுப்பது எங்களது பணியாக எதிர்காலத்தில் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ”அரசியல் பிரவேசம் குறித்து நீண்டகாலமாக பேசிவந்த ரஜினிகாந்த், தற்போது அதை அறிவித்துள்ளார். இன்று தமிழகமும் இந்திய நாடும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அவை குறித்து ரஜினி தனது கருத்து என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே அவரது அரசியல் குறித்த அணுகுமுறையை தெரிவிப்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் கூறுகையில், ”சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவேன் என்கிறார். மக்களவைத் தேர்தலில் போட்டியாஎன்றால் அப்போது முடிவு செய்வேன் என்கிறார். ஆன்மீக அரசியல் நடத்துவேன் என் கிறார். ஆன்மீகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.