ரத்ததானம் செய்வதற்கும், ரத்தம் பெறுவதற்கும் வசதியாக அதிமுக சார்பில் ரத்தத்தின் ரத்தமே என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் 47ம் ஆண்டு இன்று அதிமுகவினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வ் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ரத்த தானம் செய்யவும், பெறவும் வசதியாக ரத்தத்தின் ரத்தமே என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
விபத்து, அறுவை சிகிச்சை என மருத்துவமனையில் உயிருக்கு போராடுபவர்களுக்கு ரத்தம் கிடைக்காமல் மரணம் வரை தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழல்களை தடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப் மூலம் இலவசமாக ரத்தம் பெறலாம்.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், பிளே ஸ்டோர் மூலம் RR-Blood AIADMK என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, ரத்தம் பெற விரும்புவோறும், ரத்தம் தானம் செய்ய விரும்புவோரும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் பெயர், ரத்தப்பிரிவு, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தவுடன், ஒரு சில வினாடிகளில் ரத்தம் தேவைப்படுவோரின் முகவரிக்கு சுமார் 10 கி.மீ., தொலைவிற்குள் உள்ள ரத்தம் தான் செய்வோரின் விபரப்பட்டியல் அவர்களுக்கு சென்றடையும். அந்த பட்டியலில், ரத்தம் தானம் செய்ய விரும்புவோரின் தொலைபேசி எண், அவரது இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களும் குறிப்பிட்டிருக்கும்.
இதன்மூலம், ரத்தம் தேவைப்படுபவர்கள் தானம் செய்வோரை தொடர்புக் கொண்டு உடனடியாக ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். சூழல் பொருத்து, ஒருவருக்கு மேற்பட்டோரும் ஒரே நோயாளிக்கு ரத்தம் தானம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இலவசமாக பயன்படுத்தக்கூடிய இந்த ஆப்பை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.