தஞ்சை பெரிய கோயிலில் 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்துகின்றனர்.
தஞ்சாவூர் பெரியகோயில் அர்த்த மண்டபத்தில் வைத்து பராமரிக்கப்படும் 41 சிலைகள் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர், இரண்டு கட்டங்களாக, ஏற்கனவே ஆய்வினை மேற்கொண்டனர்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில், காவல்துறையினரும், மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையிலான தொல்லியத்துறை அதிகாரிகளும், சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தினர். புகார் எழுந்த 41 சிலைகளின் உயரம் அளவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், 4ஆம் கட்டமாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜராம் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
சிலைகளின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தல், சிலைகளின் தொன்மை, உலோகங்கள் உள்ளிட்டவை குறித்து தொல்லியல்துறை நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர். இந்த ஆய்வுக்கு பின்னரே, 41 சிலைகள் மாற்றப்பட்டதா என்பது குறித்து உண்மை நிலை தெரியவரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.