தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சென்னையில் வரும் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்படுகிறது.
அதில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 26ம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 2 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8 மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில், 10க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதுதவிர, துபாயில் உள்ள பள்ளிகளில் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்க பணிபுரிய விருப்பமுள்ள எம்எஸ்சி., பிஎட், எம்ஏ., பிஎட்., கல்வித்தகுதியோடு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றவர்கள் முதல்கட்ட நேர்காணலில் கலந்துகொள்ளலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.