மதவாதம் வேறு, ஆன்மிகம் வேறு. அத்தனை மதங்களுக்கும் பொதுவானது ஆன்மிகம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “முத்தலாக் பற்றி பொய்யான விஷயங்களைக் கூறி மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது. ஒரு வழக்கை அடிப்படையாக எடுத்துக் கொண்டு முஸ்லிம்களின் உரிமையை பறிப்பது தவறு. முஸ்லிம்களின் தனி சட்டத்தை பறித்து சமூக சர்ச்சைகளை உருவாக்கக் கூடாது. இச்சட்டத்தை மாற்ற மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ரஜினி பற்றி சுப்பிரமணியசுவாமி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. ஆன்மிக அரசியலில் ஈடுபட போவதாகவும், அதே நேரம் மதவாத சக்திகளுடன் அணி சேரமாட்டேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். மதவாதம் வேறு, ஆன்மிகம் வேறு. அத்தனை மதங்களுக்கும் பொதுவானது ஆன்மிகம். ரஜினி மதவாத அரசியல் செய்வாரா, மாட்டாரா என்பதை அவரது எதிர்கால நடவடிக்கைகளை வைத்தே கூற முடியும்.
ஆளுநரின் ஆய்வை திமுகவுடன் சேர்ந்து நாங்களும் கண்டிக்கிறோம். ஆளுநர் தனது வரம்புக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும். தலைமைச் செயலாளர், முதல்வர், அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தலாம். அதைவிடுத்து மாவட்ட அதிகாரிகளை சந்தித்து ஆய்வு செய்வது தவறு” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து திருமாவளவன் தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.