குட்கா முறைகேடு விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஜாமின் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
குட்கா முறைகேடு வழக்கு விவகாரத்தில் குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி 6 வது நபராக திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னாள் உணவு பாதுகாப்புதுறை அதிகாரியுமான சிவகுமார் கைது செய்யப்பட்டார்.
இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவகுமார் ஜாமின் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், குட்கா வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்திற்காக தானும் இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குட்கா முறைகேடு தொடர்பாக பல முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், சிவகுமாருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என சிபிஐ தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சிவகுமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.