அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை தருமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். ஆங்காங்கே பலர் உயிரிழந்தும் வருகின்றனர். இந்த சூழலில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை கல்வித்துறை கேட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்றையதினம் சென்னை சேத்துப்பட்டு எம் சி சி மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. நிலவேம்பு குடிநீரை ஆர்வத்துடன் வாங்கி குடித்த மாணவர்கள் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மற்ற பள்ளிகளிலும் எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.