டெங்கு காய்ச்சல் தடுப்பு முயற்சியாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் ஒன்றரை லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன் நாயர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 25 முதல் 29 வரையிலான ஐந்து நாட்களில் மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் சித்த மருந்தான நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டுள்ளது.
நிலவேம்பு
வைரஸ்கள் மூலம் பரவக்கூடிய தொற்றுகள் மட்டும் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக நிலவேம்பு கஷாயம் திகழ்கிறது. அண்டிரோகிபிஸ் பனிகுலேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட நிலவேம்பு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் மூலிகையாகும்.
நிலவேம்பு கஷாயம்
நிலவேம்பு, விளாமிச்சை வேர், வெட்டி வேர், சுக்கு, மிளகு, கோரை கிழங்கு, சந்தனம், பேய் புடல், பற்படகம் ஆகியவை கலந்து நிலவேம்பு பொடி என்னும் சூரணம் தயாரிக்கப்படுகிறது. 2 அல்லது 3 டீஸ்பூன் (10 கிராம்) அளவு நிலவேம்பு சூரணத்தை 240 மி.லி. தண்ணீரில் கலந்து அதை கொதிக்க வைக்க வேண்டும். நான்கில் ஒரு பங்காக குறையும் வரை அதாவது 60 மி.லி. தண்ணீராக வற்றும்வரை கொதிக்க வைத்து பின்னர் அதை பருக வேண்டும்.
நிலவேம்பு கஷாயத்தின் பயன்கள்
தலைவலி, உடல் வலி, தசை வலி, அசதி, சோர்வு போன்றவற்றுடன் கூடிய காய்ச்சலின் அறிகுறிகளை நிலவேம்பு குடிநீர் குறைக்கிறது. மூட்டு வலி, மூட்டு வீக்கம், சிக்கன்குனியாவுடன் தொடர்புடைய தோல் பாதிப்பு ஆகியவற்றை இக்குடிநீர் குணமாக்கும் என்று கூறப்படுகிறது.