உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, தீபாவளிக்கு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு, பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என்று சென்னை போலீசார் எச்சரித்தனர்.
இந்நிலையில், பல மாவட்டங்களில் மக்கள் நள்ளிரவு முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, நெல்லை சேரன்மாதேவியில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 13 பேர் கைதுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட சிறுவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 6 சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் 7 இளைஞர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 தடையை மீறி செயல்படுதல், 285 அரசாணையை மீறி செயல்படுதல், 291 பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் 97 பேர், கடலூரில் 13 பேர், விழுப்புரத்தில் 255 பேர், நாமக்கல்லில் 7 பேர், ஈரோடில் 7 பேர், தஞ்சையில் 10 பேர், சேலத்தில் 50 பேர், கொடைக்கானலில் 2 பேர், வேலூரில் 2 பேர், நெல்லையில் 31 பேர், விருதுநகரில் 80 பேர், கோவையில் 85 பேர், திருப்பூரில் 57 பேர், அரியலூரில் 14 பேர் என இதுவரை மொத்தம் 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.