சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவி வகித்த போது அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த முறைகேடு மூலம் அரசுக்கு ரூ1.78 கோடி இழப்பு எனவும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இக்குற்றச்சாட்டு பதிவுகளை ரத்து செய்யக் கோரி மேலும் ஒரு மனுவை மாறன் சகோதரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாறன் சகோதரர்களின் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.