பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று சிவகங்கையிலிருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரையிலான மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் சிறையில் வாடும் ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி அம்மாள் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கையில் தொடங்கிய இந்தப் பேரணியானது திருமயம், கந்கர்வகோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், கட்டுமன்னார்குடி, விருத்தாசலம், வடலூர், கடலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், பெருங்களத்தூர் சென்னை கிண்டி வழியாக ஆளுநர் மாளிகையில் முடிகிறது.
பேரணியின் போது எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகைகளுடன், கோஷங்களும் எழுப்பப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஆளுனருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்தது.
7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி ஆளுனருக்கு இந்த பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் சைக்கிள் பேரணியானது நடைபெறுகிறது.