கஜா புயல் இன்னும் சில மணி நேரங்களில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, மீட்பு குழுவினர் பல்வேறு முக்கிய பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. கஜா என்று பெயர் சூட்டியுள்ள புயல் சென்னையில் இருந்து 720 கி.மீ., தொலைவில் உருவாகியுள்ளது. இது, வரும் 15ம் தேதி கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்றும், இன்னும் சில மணி நேரத்தில் புயல் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புயல் அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்துள்ளதால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கன மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்எதிரொலியாக, மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
கஜா புயல் தீவிரமடையும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 3 பேரிடர் மீட்பு குழுக்கள் நாகைக்கும், 2 குழுக்கள் சிதம்பரத்திற்கும், சென்னை, கடலூர், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா ஒரு குழுவும் அனுப்பபட்டுள்ளன. இதனால் மீட்பு குழுவினர் அந்தந்த இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.