சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ந் தேதி பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் திறக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.
அண்ணா அறிவாலய வளாக முகப்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்க தி.மு.க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை இன்று அகற்றப்பட்டது. அண்ணா மற்றும் கருணாநிதி இருவருக்கும் ஒரே மேடையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த சிலைகள் டிசம்பர் 16-ந் தேதி திறக்கப்பட உள்ளன. இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி திரு உருவச் சிலையை வருகின்றன டிசம்பர் 16-ந் தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கின்றனர்.
5 முறை முதல்வராக இருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்து தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் கருணாநிதி திரு உருவச் சிலை திமுக தலைமை கழகமாம் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்பட உள்ளது.
புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையும் கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.