கஜா புயலின் கோரதாண்டவத்தால், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதற்காக, களப்பணியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகன்றனர்.
இதுகுறித்து, தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் மின் வழிதடங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இங்கு, நேற்று காலை முதல் சீரமைப்பு பணிகள் மிக துரிதமாக நடந்து வருகின்றன.
மின் சீரமைப்பு பணியில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த 7,776 மின் பணியாளர்களும், பிற மின் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பணியாக அனுப்பப்பட்ட 3,400 மின் பணியாளர்களும், 195 அலுவலர்களும் சேர்ந்து மொத்தமாக 11,371 பேர் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையைப் பொறுத்து கூடுதல் பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.