வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
கஜா புயல் கரையை கடந்து வங்கக்கடலில் மையம் கொண்டிருப்பதால் அங்கு மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது வலுவடைந்து வரும் காரணத்தால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று மதியம் வெளுத்து வாங்கிய மழை அதன்பிறகு பெய்யவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, சென்னையில் கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், சாலிகிராமம், எழும்பூர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மழை வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.