தி.மு.க அணியில் இருந்து திருமாவளவனைப் பிரிக்கும் வேலைகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தி.மு.க பேசுவதில்லை என்ற வாதத்தை வைத்தே, இந்த வேலையை சிலர் தொடங்கியுள்ளனர்' என குமுறுகின்றனர் சிறுத்தை கட்சி நிர்வாகிகள்.
'நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இருக்கும் அணியில் நாங்கள் இருப்போம்' எனத் தொடக்கத்தில் இருந்தே பேசி வருகிறார் திருமாவளவன். அதற்கேற்ப, டெல்லியில் ராகுல்காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பை ஸ்டாலின் விரும்பவில்லை. அந்தநேரத்தில், திருநாவுக்கரசருடன் இருந்த வேறுபாடு காரணமாக, காங்கிரஸோடு கூட்டணியா என்பதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.
இந்த நிலையில், திருமாவளவனோடு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி சில உடன்பிறப்புகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாகப் பேசும் அவர்கள், தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் நிலையில் இருக்கிறார் ஸ்டாலின்.
அவருடைய பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறார் திருமாவளவன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களைப் பெறுவதற்காக தீக்குளிப்பு போராட்டம் வரையில் நடத்தினார்கள்.
இதனை துரைமுருகன் கசப்பு உணர்வோடு கவனித்தார். 'உங்களுக்கெல்லாம் இரண்டு சீட் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்' என நக்கலடித்தார்.
இதனால் அடுத்து வந்த தேர்தலில் தி.மு.க அணியை விட்டு விலகிவிட்டார் திருமாவளவன்.
இப்போது காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு வருகிறார். ராகுலிடம் பேசி, எப்படியாவது இரண்டு சீட் வாங்கிவிட வேண்டும் என நினைக்கிறார். இதற்கு திமுக பிரமுகர்கள் யாரும் சம்மதம் தெரிவிப்பது போலத் தெரியவில்லை.
திருமாவளவன் வந்தால் நமக்கு இருக்கும் வடமாவட்ட வாக்குகள் வந்து சேராது எனப் பேசி வருகின்றனர். அதேநேரம், திருமாவுடன் இருப்பவர்களும், 'உடுமலை சங்கர் உள்பட பல ஆணவக் கொலைகளுக்கு திமுக மௌனம் சாதித்தது. நாம்தான் போராடி வருகிறோம்' எனப் பேசியுள்ளனர்.
இதுபோன்ற விமர்சனங்களைப் பார்த்த பிறகுதான், ' திமுக சாதி வெறிப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என சிலர் தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள். சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் திமுக ஆதரிக்காது. வரவிருக்கும் கழக ஆட்சியில், சாதி வெறிக் கொடுமைகளை தடுத்து, கடுமையாக தண்டிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்' என அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவான எந்த சக்தியையும் விட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். கழகத்தில் உள்ள சிலர்தான் கூட்டணியைக் கெடுப்பதில் உறுதியாக உள்ளனர்'' என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
- அருள் திலீபன்