திமுக- விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு ஆப்பு வைக்கிறாரா தோசை மதிமாறன்

VCK condemns Mathimaran Post

by Mathivanan, Nov 21, 2018, 16:18 PM IST

திமுகவுக்கு எதிராக வி.சி.கவை மாற்ற முயற்சிக்கிறார் மதிமாறன்' எனக் கடுகடுப்புடன் பதிவிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு.

திராவிடர் கழக மேடைகளில் தொடர்ந்து பேசிவரும் வே.மதிமாறன், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் தி.மு.க. X திருமாவளவன் = பா.ம.க. என்ற தலைப்பில் வி.சி.க குறித்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

‘எப்படியாவது திமுக விற்கு எதிரான பதிலை பெற்றுவிடவேண்டும்’ என்று சில ஊடகங்கள் தொடர்ந்து திருமாவளவனை நிர்பந்திக்கிறது. அப்படி அவரைப் பேச வைத்துவிட்டால்,

தி.மு.க.கூட்டணியிலிருந்து வி.சி.க. வை வெளியியேற்றிவிட்டு அந்த இடத்தில் பா.ம.க. வை நிரப்பி விடலாம் என்பதுபோலவே இருக்கிறது திருமாவளவனிடம் கேட்கப்படுகிற கடுமையான கேள்விகளும் அன்புமணியின் மென்மையான எதிர்காலத் திட்டப் பேட்டிகளும்.

வேண்டுமென்றே திமுக வை தலித் விரோத கட்சியாகச் சித்தரித்துத் திருமா அவர்களிடம் கேட்கிற ஊடகங்கள், அவரிடம் பாமக குறித்து வாய் திறப்பதே இல்லை.
அதேபோல் டாக்டர் அன்புமணியிடம் தனிப் பேட்டி நடத்தி, தலித் மக்கள் மீது நடக்கிற வன்முறைகள், ஜாதிக்கட்சிகள் குறித்தும் கிடுக்குப்பிடி கேள்விகளை ஒருபோதும் கேட்டதில்லை.

இதுபோக, காடுவெட்டி குரு மரணத்திற்குப் பிறகு பாமக வை பலப்படுத்தும் பணியில் அடுத்தக் கட்டமாக வேல்முருகன் பாமகவோடு பாசமாவதற்கான சூழல் கனிந்திருப்பதாகவே தெரிகிறது. இணைப்புப் பணியை ஊடககாரர்களே சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.
அப்புறம் என்ன கூட்டணியில் கூடுதல் சீட்டுகள் கேட்க வேண்டியதுதான்.

பா.ஜ.க. வைத் தவிர, திமுக வுடன் கூட்டணிக்கு யார் வேண்டுமானலும் வரலாம். ஆனால், ஆட்சியில் பங்கு கேட்பவர்களும், முதல்வராகும் ஆசை உள்ளவர்களும் கூட்டணியைத் தவிர்ப்பது நல்லது.

முடிவு வந்த பிறகு குமாரசாமியைப்போல் நம்மளும் முதல்வராகி விடலாம் என்ற திட்டம் உள்ளவர்கள் கூட்டணிக்குள் இருப்பது திமுக விற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நல்லதல்ல.

என்னுடைய தமிழக அரசியல் சுற்றுப்பயண அனுபத்தை வைத்துச் சொல்கிறேன், தனித்தே ஆட்சியமைக்கும் அளவிற்குத் திமுக விற்குச் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.

ஆக, ‘திமுக அமைச்சரவை, ஸ்டாலின்தான் முதல்வர்’ என்கிற முடிவோடு இருப்பவர்கள் மட்டும் கூட்டணிக்குள் வருவது சிறப்பு.

இப்போதைய தி.மு.க. கூட்டணி அப்படிதான் இருக்கிறது. இனி கூட்டணிக்கு வருபவர்களாக இருந்தாலும் இந்த முடிவோடு இருப்பவர்களாக இருந்தால் நல்லது. எல்லோருக்கும்.

இவ்வாறு மதிமாறன் பதிவிட்டிருந்தார். இதற்குப் 'மன நோயாளி ராமதாசு வழியில் மதிமாறன்? என்ற தலைப்பில் பதில் கொடுத்துள்ள வன்னியரசு, 'அனுகூல சத்ரு’ என்று சொல்வார்கள். இதற்கு பொருத்தமான நபர் மதிமாறன் தான். இன்னும் சொல்வதென்றால் ‘மக்களே போல் கள்வர்’ என்று வள்ளுவர் அடையாளம் காட்டியவரும் இதே மதிமாறன் தான்.

இப்போது திமுகவுக்கு ஆதரவானவர் போலவும், திராவிட கருத்தியலை பரப்புரை செய்பவர் போலவும் காட்டிக்கொள்ளும் இவர் திமுகவுக்கு எதிராக இறக்கி விடப்பட்டடுள்ள ‘அணுகூல சத்ரு’. திமுக தனியாகவே வெற்றி பெறும் என்றும் ஸ்டாலினே முதல்வராவார் என்று கட்டி இறக்கி விடுவதற்கு காரணம், ஸ்டாலின் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதை தவிர எதுவும் இல்லை.

அது மட்டுமல்லாது, வலதுசாரி இந்துத்துவ அரசியல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதை எதிர்கொள்ள மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தியா முழுக்க பாஜக, இந்துத்துவக்கும்பலுக்கு எதிராக அணி சேர்ந்து வருகிறார்கள்.

இதை உணர்ந்து தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி அமைக்க உதவினார். இல்லையென்றால் பாஜக தான் ஆட்சி அமைத்திருக்கும்.

அந்த சமூக நீதிபார்வையோடு தான் ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வருகிறார். விடுதலைச்சிறுத்தைகள் 2016 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடனேயே மதச்சார்பின்மை மாநாட்டை நடத்தி பாஜக போன்ற சனாதனிகளுக்கு எதிராகக் கிளம்பியது. இந்த நெருப்பு இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் பற்ற ஆரம்பித்து விட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் சந்திப்பு கூட இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான். நிலைமை இப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் திமுக தனியாகவே நின்று வெற்றி பெறும் என்று பரப்புரை செய்வது, திமுகவின் மீதான வெறுப்பில் மட்டுமல்ல; திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தை தவிர எதுவும் இல்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது கூட, திமுக தனித்தே வெற்றி பெறும் என்று திமுக தலைமைக்கு தவறான ஆலோசனை கூறியதால் தான் திமுக தோல்வியை சந்தித்தது. அதே தவறான ஆலோசனையைத் தான் இப்போது மதிமாறனும் கூறுகிறார். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்னும் முழக்கம் கோட்பாட்டு முழக்கமாகும்.

இதையே தான் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்று வள்ளுவர் முழங்கினார். பகுத்து உண்பது வெறும் உணவு மட்டுமல்ல; அதிகாரமும் தான். பல அதிகாரங்களை குறளில் படைத்த வள்ளுவன் உணவுக்காக மட்டுமா இதை எழுதியருப்பார். சமத்துவத்துக்கான முழக்கம் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்னும் முழக்கம். ஆனால், இதை திமுகவுக்கு எதிரான முழக்கமாக மாற்றத்துடிக்கிறார் மதிமாறன்' எனப் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் தோசை உள்ளிட்ட உணவிலும் ஜாதி இருக்கிறது என மதிமாறன் பேசியது பெரும் விவாதப் பொருளானது குறிப்பிடத்தக்கது.

 

 

You'r reading திமுக- விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு ஆப்பு வைக்கிறாரா தோசை மதிமாறன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை