தற்காலிக ஓட்டுநர்களின் அட்ராசிட்டீஸ்...

நாங்கள் ஒரு நாளைக்கு 600 ரூபாய் வாங்குகிறோம்

Jan 8, 2018, 13:53 PM IST

கோவை மாவட்டம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்கள் கூட கிடைக்காமல், 800 பேருந்துகளுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லாரி போன்ற கனரக வாகன ஓட்டுநர்களை சில நாட்களுக்கு தற்காலிக ஓட்டுநர்களாக பணிபுரிய வரும்படி கோவை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களும் வந்து தேர்வில் கலந்து கொண்டனர். அங்கு சொல்லப்பட்ட சம்பளத்தை கேட்டு அங்கிருந்து நழுவ தொடங்கினர்.

அங்கிருந்து வெளியேறிய ஒருவரிடம் கேட்டபோது, எட்டு மணி நேரத்திற்கு 436 ரூபாய் போதாது என்றும், நாங்கள் ஒரு நாளைக்கு 600 ரூபாய் வாங்குகிறோம் என்றும், வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் 600 ரூபாய் கிடைத்துவிடும் என்றும், வேலை வேண்டாம், ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்துவிட்டதாகவும் கூறினார்.

போக்குவரத்து அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கையாக, சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள பேருந்து ஓட்டுநர்களை தற்காலிக பணிக்கு அழைப்பு விடுத்துள்ளர். ஆனால் இதுவரை எத்தனை பேர் தர்காலிக ஓட்டுநராக பணிக்கு வந்துள்ளார்கள் என தெரிவிக்க மறுத்துவிட்டார்கள்.


கோவையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது. கிடைத்த வரைக்கும் லாபம் என, பேருந்து ஓட்ட தெரிந்தால் போதும் என்ற அடிப்படையில், பயணம் செய்ய வந்தவர்களையும் பஸ் ஓட்ட வைத்து விடுகிறார்கள். போதிய அனுபவமின்மை காரணமாக தமிழகம் முழுக்க பல இடங்களில் தற்காலிக ஓட்டுநர்களால் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.


அவற்றுள் சில, உங்கள் பார்வைக்கு...

சம்பவம் 1...

நேற்று சென்னை தி.நகரில் உள்ள பேருந்து நிலையத்திலுள்ள ஓரு அரசு பேருந்தை, தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கினார். அவர் அரசு பேருந்தில் முன் அனுபவம் மற்றும் கைப்பக்குவம் இல்லாத புதிய ஓட்டுநர் என்பதால் தயங்கி தயங்கியே ஓட்டுவதற்கு முன் வந்துள்ளார்.

அவர் பேருந்தை ஸ்டார்ட் செய்த ஒருசில வினாடிகளில், பேருந்து திடீரென வேகமாக முன்னே சென்று ஆஃப் ஆகியுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் பலத்த கூச்சலிட்டனர், 


அதை கண்ட அருகில் நின்ற அதிகாரிகள் பேருந்துக்குள் சென்று, அந்த தற்காலிக ஓட்டுநருக்கு அந்த இடத்திலேயே ஓட்டுநர் பயிற்சி அளித்துள்ளார்கள்.


பின்னர் சில ஆலோசனைகளை வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார்கள். பின்னர் தற்காலிக ஓட்டுநர் பயப்படாமல் ஓட்டினாரோ என்னவோ.. பயணிகள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டே பயணித்தனர்.

சம்பவம் 2...

நேற்று பன்ருட்டியிலிருந்து கடலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, நெல்லிகுப்பம் அருகிலுள்ள கீழ் அருங்குணம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து கீழே இறங்கி ஓடி, ஒரு வயலுக்குள் இறங்கி நின்றது.


அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேருந்தை ஓட்டியது ஒரு தற்காலிக ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 3...

இன்று காலை ஆவடி பேருந்து நிலையத்திலிருந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் ஒருவர் பின்பக்கமாக எடுத்து வந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த பேருந்து, பேருந்து நிலைய சுற்றுச்சுவறில் மோதி விபத்துக்குள்ளானது. 

பேருந்து சுவற்றில் மோதியதால், வேறு பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

You'r reading தற்காலிக ஓட்டுநர்களின் அட்ராசிட்டீஸ்... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை