மக்கள் நலக் கூட்டணியைக் கைகழுவிய பிறகு காங்கிரஸ் கூட்டணிக்குள் இடம் தேடிக் கொண்டார் திருமாவளவன். எந்த அணியிலும் சேர முடியாமல் தவித்து வருவது வாசனும் விஜயகாந்தும் தான். ' தினகரனை நம்பிப் போனால் தேர்தல் செலவுகளுக்குப் பிரச்னை இல்லை' என நினைக்கிறார் பிரேமலதா.
பிரதமர் மோடியை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது மத்தியில் ஆளும் பிஜேபி கட்சி. 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளும் கூட்டணியும் இந்தமுறை பிஜேபிக்கு அமையும்' என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. மோடி பிரதமர் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, அன்புமணியும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மட்டுமே எம்.பி ஆனார்கள். 'சுதீஷ் வெற்றி பெறுவார்' என நம்பிய கேப்டனுக்குத் தோல்வியே கிடைத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லி சென்ற விஜயகாந்தை, வாஞ்சையுடன் வரவேற்று கன்னத்தைத் தடவிக் கொடுத்தார் மோடி.
அதன்பிறகு, பிஜேபியுடன் தேமுதிக இணக்கமாக இல்லை. தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸிலும் விஜயகாந்த் இல்லை. உடல்நலக் கோளாறு காரணமாக, அறிக்கை விடுவதோடு முடித்துக் கொள்கிறார். பொருளாளர் என்ற முறையில் நாள்தோறும் மீடியாக்களுக்குப் பேட்டி கொடுக்கிறார் பிரேமலதா. தனக்குப் பக்கபலமாக மகன் விஜய பிரபாகரனையும் களமிறக்கிவிட்டிருக்கிறார்.
'கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில் தன்னுடைய தலைமையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்' என அவர் நம்புகிறார் பிரேமலதா. அதற்கு முன்னோட்டமாகத்தான் கட்சிப் பதவிக்கு வந்திருக்கிறார். மக்கள் மத்தியில் இருந்து கரைந்து கொண்டிருக்கும் கட்சியை கரையேற்ற அவர் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார். 'வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஓரிரு இடங்களையாவது வென்று முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிட வேண்டும்' என துடிக்கிறார்.
ஆனால், அதற்கேற்ப அணிகள் அமையாமல் குழப்பத்தில் இருக்கிறார். இதுதொடர்பாக நடந்த விவாதத்திலும், ' தினகரனோடு சேர்ந்தால் மட்டுமே சரியாக இருக்கும். தேர்தலுக்கும் அவர் செலவு செய்வார். நமக்கும் சிரமம் இருக்காது. மைனாரிட்டி ஓட்டுகளும் தினகரனுக்குக் கிடைக்கும். திமுக அணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்தால், தினகரன், தேமுதிக என புதிய அணியை உருவாக்கலாம்' எனப் பேசியுள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணிக்குள் விஜயகாந்தைக் கொண்டு வருவதற்கும் இதுபோன்ற பேரங்கள்தான் நடத்தப்பட்டன. ஒருகட்டத்தில், ' இந்தக் கூட்டணி அமைந்தால் தொழில் அதிபர்கள் நமக்கு உதவுவார்கள்' எனப் பேசித்தான் சம்மதம் வாங்கினார் வைகோ. இப்படியொரு டீலிங் நடந்திருப்பது தெரிந்தும் காம்ரேடுகள் மௌனம் காத்தார்கள். அந்தக் கூட்டணி மண்ணைக் கவ்விய பிறகு ஆளுக்கொரு திசையில் ஒதுங்கிக் கொண்டார்கள். வருகிற தேர்தலில் செலவு செய்யும் நிலையில் தேமுதிகவில் யாரும் இல்லை. அப்படியே இருந்தாலும் பணத்தை இறைக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால்தான் தினகரனோடு அணி சேருவதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்கின்றனர் கட்சி பொறுப்பாளர்கள்.
- அருள் திலீபன்