ஸ்டெர்லைட்- சீராய்வு மனு தள்ளுபடி: தமிழக முதல்வரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் அளவிற்கு அலட்சியமாக தமிழக அரசு இந்த வழக்கை கையாண்டு வருவதாகவும், இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்டனத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பது தொடர்பாகவும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆலையை ஆய்வு செய்யவும்,தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் அளவிற்கு, இந்த வழக்கினை ஆர்வமின்றி அலட்சியமான முறையில் நடத்திய தமிழக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகிய அனைத்து மன்றங்களிலும் இந்த வழக்கை நடத்திய விதம் மாண்புமிகு எடப்பாடி திரு பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கு நிரந்தர சான்றாவணமாகத் திகழ்கிறது.

தனியாருக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக துவக்கத்திலிருந்தே அதிமுக அரசு ஒருதலைப் பட்சமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கு அடுக்கடுக்கான உதாரணங்களை எடுத்துக்காட்டிட முடியும். ஜனநாயக ரீதியில் அறவழியில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது, நூறாவது நாளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களைப் பலிவாங்கியது; உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும், பலியானோர் குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் வேண்டுமென்றே கால தாமதம் செய்தது; தமிழக அரசின் பிரதிநிதிகளே இல்லாமல் ஒரு ஆய்வுக் குழுவை அமைக்க அனுமதித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழகத்தின் வாதங்களை கோட்டை விட்டது; என வரிசையாக எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன.

ஏன்; இந்த வழக்கினை ஆரம்ப கட்டத்தில் விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு “ஆலையை மூடி அரசு போட்டுள்ள உத்தரவு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. ஆகவே கொள்கை முடிவு எடுத்து முறையான ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று அரசுக்கு முன்னெச்சரிக்கை செய்தும்,அதிமுக அரசு திருத்திக் கொள்ளாமல் ஏதோ உள்நோக்கத்தோடு அடம்பிடித்தது. அதனால் மனித நேயமற்ற, மனித உரிமைகளுக்கு எதிரான போலீஸ் தடியடி மற்றும் கொடூரமான துப்பாக்கிச்சூட்டின் காயங்கள் ஆறுவதற்கு முன்பே,தனியார் ஆலை திறக்கப்பட்டு விடுமோ என்ற நிலை இப்போது உருவாகி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்பகுதி மக்கள் அச்சத்திலும் பதற்றத்திலும் உறைந்து போயிருக்கிறார்கள். மக்களின் உயிர் நாடிப் பிரச்சினையான சுற்றுப்புறச்சூழல் விவகாரத்தில்,அதிமுக அரசின் ஆணவப் போக்கு பேரதிர்ச்சியளிப்பதாக அமைந்து விட்டது.

“ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் சூழல்” எக்காரணம் கொண்டும் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே அமைச்சரவைக் கூட்டத்தை பிரத்தியேகமாகக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் அதிமுக அரசுக்குக் கோரிக்கை வைத்தேன். பல்வேறு எதிர்கட்சிகளும், சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காமல், மயான அமைதி காத்த அதிமுக அரசு, தன்னிச்சையாக “பெயரளவுக்கு” ஒரு அரசாணையை வெளியிட்டு,ஆலையை மூடிவிட்டு அதையே நியாயப்படுத்தியது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை எள்ளி நகையாடிய அமைச்சர்களும்- மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள படுதோல்விக்கு முழுப் பொறுப்பாளிகள் ஆவார்கள். மக்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒரு வழக்கினை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக ஸ்டெர்லைட் வழக்கை ஏனோதானோவென நடத்தியிருக்கும் அதிமுக அரசின் மாபெரும் துரோகத்தையும் வஞ்சகத்தையும் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்; உகந்த நேரத்தில் தக்கபாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News