ஒகி புயலில் சிக்கி காணாமல்போன கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்விக்கு, சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், ஒகி புயல் குறித்து உரிய முன்னெச்சரிக்கை விடப்படவில்லை என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்க்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “புயல் உருவாகும் முன்னரே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. போதிய தொலைத் தொடர்பு வசதி இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியவில்லை. புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது..
மற்ற மாநிலங்களுக்கு திசை மாறி சென்ற மீனவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் மூலம் டீசல், உணவுப்படி வழங்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். ஒகி புயலால் மாயமான 3,522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். கடைசி மீனவரை மீட்கும் வரையில் தேடுதல் பணி தொடரும். தேசிய பேரிடராக ஒகி புயல் பாதிப்பை அறிவிக்க கோரி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். வானிலை தொடர்பான விவரங்களை மீனவர்களுக்கு தமிழில் தெரிவிக்க பிரத்யேக செயற்கைக்கோள் அனுப்ப பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.” என்றார்.