டிடிவி தினகரன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

by Isaivaani, Jan 9, 2018, 16:11 PM IST

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், அதிமுக, திமுக ஆகிய முன்னணி கட்சிகளை பின்னுக்கு தள்ளி சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

பின்னர், எம்எல்ஏவாக பதவி ஏற்ற டிடிவி தினகரன் கடந்த 8ம் தேதி முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், டிடிவி தினகரனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், “சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும், அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன” என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும், அந்த தொகுதியில் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதனால், டிடிவி தினகரனின் வெற்றி செல்லாது எனவும், தினகரன் சட்டமன்றத்திற்கு செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனவும், அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் உத்தரவிட்டார்.

You'r reading டிடிவி தினகரன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை