சென்னை விமான நிலைய மெட்ரோ ஸ்டேஷனில் மதிமுக பொது செயலாளர் வைகோவுடன் லிப்டில் குடிபோதையில் ஏறிய இளைஞர்களுக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதிமுக பொது செயலாளர் வைகோ முதல்முறையாக இன்று மெட்ரோ ரயிலில் பயணித்தார். சென்னை திருமங்களத்தில் ஏறிய வைகோ சென்னை விமான நிலைய மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கினார். இவருடன் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.
இந்நிலையில், மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள லிப்டில் வைகோவும் உடன் வந்தவர்களும் ஏற முயன்றனர். அப்போது, உள்ளே இரண்டு இளைஞர்கள் இருந்தனர். இருவரையும் வெளியே வரும்படி மதிமுகவினர் கூறியுள்ளனர்.
ஆனால், அந்த இளைஞர்கள் வெளியில் வர மறுத்துவிட்டனர். இதனால், வைகோவும், கட்சியினரும் இளைஞர்களுடன் லிப்டில் பயணித்தனர். அப்போது தான் அந்த இளைஞர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
வைகோ இறங்கிவுடன், அந்த இளைஞர்களுக்கு லிப்டிற்குள்ளேயே தர்ம அடி விழுந்துள்ளது. பிறகு, லிப்டில் இருந்து வெளியேறிய இளைஞர்கள் வைகோவிடம் தங்களை அடித்துவிட்டதாக முறையிட்டனர். இளைஞர்களை தாக்கியவர்களை கண்டித்த வைகோ அதற்காக வறுத்தமும் தெரிவித்தார்.
வைகோவுடன் லிப்டில் பயணித்த இளைஞர்களால் விமான நிலைய மெட்ரோ ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது.