மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய மனசாட்சியாக முரசொலிமாறனை வைத்திருந்தார். முரசொலிமாறன் கட்சி விவகாரங்களில் சொல்லும் கருத்தை ஆமோதித்து வந்தார் கருணாநிதி. அதனாலயே, கருணாநிதியின் மனசாட்சி என்று புகழாரம் சூட்டப்பட்டவர் முரசொலிமாறன்.
அதையே, கருணாநிதியும் பலமுறை வழிமொழிந்துள்ளார். தற்போது, அதே பாணியை மு.க.ஸ்டாலினும் பின்பற்ற விரும்புகிறாராம்.
கடந்த சில ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், திமுக தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதை பிரதான பாத்திரம் வகித்து வருகிறார் என்பது நாடறிந்த விஷயம்.
கடந்த லோக்சபா தேர்தலின்போதும், சட்டசபை தேர்தலின்போதும் சபரீசன் ஆடிய பரமபத விளையாட்டுகளை அரசியல் உலகம் நன்கு அறியும். குறிப்பாக, தேமுதிகவை திமுக கூட்டணியில் கொண்டுவருவதற்கு சபரீசன் பட்டபாடை எல்லோரும் அறிவர்.
ஆனால், சபரீசன் கனவு நனவாகவில்லை. இந்த நிலையில், தற்போதும் திமுகவின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சபரீசன் உட்பட ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினெட் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம்.
இதனால், கருணாநிதி பாணியை பின்பற்றி தம்முடைய மருமகன் சபரீசனை மனசாட்சிப்போல செயல்பட விரும்புகிறாராம் ஸ்டாலின். இதற்காகவே, சபரீசனை ராஜ்யசபா எம்பி ஆக்கலாம் என்கிற ஒரு யோசனையும் கிச்சன் கேபினெட் முன்வைத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- எழில் பிரதீபன்