தமிழகத்தில் மீண்டும் புயலுக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Possibility of a storm again in Tamil Nadu

by Isaivaani, Dec 8, 2018, 14:52 PM IST

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல மாவட்டங்கள் இன்னும் அதன் துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று காலை வரை சாத்தனூர், சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ., மழையும், வேலூர் கலவை, கிருஷ்ணகிரியில் தலா 1 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது தீவிரம் அடைந்து  புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 10ம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தமிழகம், ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளனர்.

மேலும், 12ம் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகரத் தொடங்கும் என்றும் 14ம் தேதி கரையை நெருங்கும், 15ம் தேதிக்குள் கடற்கரையை அடையும், 16ம் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், திங்கட்கிழமைக்கு மேல் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு பேய்ட்டி என்று பெயர் சூட்டும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

You'r reading தமிழகத்தில் மீண்டும் புயலுக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை