தந்தி டிவி தலைமை ஆசிரியராக இருந்த சர்ச்சைக்குரிய ரங்கராஜ் பாண்டே அப்பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்துத்துவாவின் குரலாக ஊடகங்களில் ஒலித்து வருபவர் ரங்கராஜ் பாண்டே. ராஜீவ் கொலை வழக்கில் 3 தமிழர்களை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து செங்கொடி தீக்குளித்து உயிர்நீத்தார்.
அப்போது காதல் தோல்வியால் செங்கொடி தற்கொலை என எழுதியவர் ரங்கராஜ் பாண்டே. அதேபோல் தந்தி தொலைக்காட்சியில் அரசியல் தலைவர்களிடம் பேசும் போது, இந்துத்துவா குரலில் மட்டுமே பேசக் கூடியவராக இருந்தார் பாண்டே.
இதனால் அவர் சர்ச்சைக்குரிய நபராகவே சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் ஜெ. ஜெயலலிதா எனும் நான்.. என்ற தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை ரகசியங்களை பேசும் தொடரை தந்தி டிவி ஒளிபரப்பியது.
இத்தொடர் முழுமையாக சசிகலா குடும்பத்துக்கு ஆதரவானதாக மட்டும் இருந்தது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையாகிப் போனது.
இதையடுத்து தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து ரங்கராஜ் பாண்டே வெளியேற்றப்பட்டார். ஆனால் தாமே முடிவெடுத்து தந்தி டிவியில் இருந்து விலகியதாக ரங்கராஜ் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.