தினமணி ஆசிரியரின் செல்ஃபோன் எண்களை ஃபேஸ் புத்தகத்தில் வெளியிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனம் மட்டுமல்லாமல், ஊடகத்தினருக்கு எதிரான அடக்குமுறையாகவே பார்க்கிறேன் என்று தமிழ்நாடு செய்தியாசிரியர்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் விஷ்வா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டாள் பற்றிய வைரமுத்து சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சி அன்பர்கள் பொதுவெளியில் நாகரிக வரம்பை மீறிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் மூத்த பத்திரிகையாளர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு “அகில உலக” so called பத்திரிகையாளர், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனின் செல்ஃபோன் எண்களை ஃபேஸ் புத்தகத்தில் வெளியிடுகிறார்.
இது அப்பட்டமான அயோக்கியத்தனம் மட்டுமல்லாமல் ஊடகத்தினருக்கு எதிரான அடக்குமுறையாகவே நான் பார்க்கிறேன். இந்தக் காட்டிக்கொடுக்கும் போக்கை கடுமையாகக் கண்டிக்கிறேன்.
ஆண்டாள் பற்றிய அறிவார்ந்த விவாதத்தை முன்னெடுக்காமல் சாக்கடைக்குள் விழுந்து கதறிப் பதறும் இவர்களின் நிலை கண்டு நான் வருந்துகிறேன்.
பாஜக நாகரிகம் பேணும் கட்சி என்று இனியும் கூறாதீர்கள். அந்தத் தகுதியை தமிழ்நாடு பாஜக இழந்துவிட்டது. கட்சித் தலைமை இனியும் இதில் கண்டும் காணாமல் இருப்பது கட்சியின் நலனுக்கும் நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார்.