நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களில் இருந்து நிலம் எடுப்பதை கடலூர் மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நெய்வேலியை ஒட்டிய 26 கிராமங்களில் வாழும் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், பிற உரிமைகளும் இன்னும் வழங்கப்படாத நிலையில், புதிதாக நிலங்களை பறிக்க அந்த நிறுவனம் துடிப்பதும், அதற்கு தமிழக ஆட்சியாளர்கள் துணைபோவதும் கண்டிக்கத்தக்கவை.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலியில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் 2990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுக்கு நிலக்கரி வழங்குவதற்காக இரு நிலக்கரி சுரங்கங்கள், முதலாவது சுரங்கத்தின் விரிவாக்கம் என மொத்தம் மூன்று சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ‘மூன்றாவது சுரங்கம்’ என்ற பெயரில் புதிய சுரங்கத்தை அமைக்க நிலம் எடுக்கும் பணிகளை என்.எல்.சி தொடங்கியுள்ளது. ஆனால், என்.எல்.சி திட்டப்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழக்கும் ஆபத்தும், இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளன.
மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், சாத்தபாடி, தர்மநல்லூர் உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இது சென்னை- சேலம் எட்டு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை விட இரு மடங்கு ஆகும். எட்டு வழிச்சாலைக்கான நிலங்கள் மொத்தம் 277 கி.மீ நீளத்திற்கு கையகப்படுத்தப்படவுள்ளன. ஆனால், மூன்றாவது சுரங்கத்திற்காக 20 கி.மீ சுற்றளவில் 12,125 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமானதாக இருக்கும்.
நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் பொன் விளையும் பூமியாகும். அந்தப் பகுதிகளில் கேரட் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. இத்தகைய தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் ஒரு விவசாயி ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். இத்தகைய வளமான நிலங்களை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்த என்.எல்.சியும், தமிழக அரசும் துடிப்பது மிகப்பெரிய துரோகமாகும்.
அதுமட்டுமின்றி, கையகப்படுத்தப்படும் நிலங்களில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக மணிமுத்தா, வெள்ளாறு ஆகிய ஆறுகளை விருத்தாசலத்திற்கு முன்பாக இணைக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆறுகளை அவற்றின் இயற்கையான பாதையிலிருந்து செயற்கையாகத் திருப்பினால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும். இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் ஆபத்தாகும்.
விவசாயத்தை அழித்து, ஆறுகளைத் தடுத்து மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தபடவில்லை. 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படவில்லை. ஜெயங்கொண்டம் அனல் மின்நிலையத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களும் பயனின்றி கிடக்கின்றன. இப்போது கையகப் படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலங்கள், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தேவையான பழுப்பு நிலக்கரியை தோண்டி எடுக்கப் போதுமானவை. அதனால், புதிய நிலங்களை கையகப்படுத்தத் தேவையே இல்லை.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனச் சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான ஒப்பந்தம் ஆந்திரத்தைச் சேர்ந்த மகாலட்சுமி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அதிநவீன எந்திரங்களின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் தேவையை விட 10 மடங்கு கூடுதலாக நிலக்கரியை வெட்டி எடுக்கிறது. அந்த நிலக்கரியை தனியாருக்கு விற்பனை செய்து என்.எல்.சி கூடுதல் லாபம் ஈட்டி வருகிறது. அதனால், மகாலட்சுமி நிறுவனத்திற்கு கூடுதல் பணி வழங்க வேண்டும் என்பதற்காகவே அதிக நிலங்களை கையகப்படுத்தி, புதிய நிலக்கரி சுரங்கங்களை அமைக்க என்.எல்.சி துடிக்கிறது.
1950-ஆவது ஆண்டுகளில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு தியாகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் ஏதோ ஒரு நிறுவனம் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக 26 கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே, யாருக்கும் தேவையில்லாத, இயற்கைக்கு எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அரசும் என்.எல்.சியும் கைவிட வேண்டும்.
அதையும் மீறி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முயன்றால், அதற்கு எதிராக நானே நேரடியாக களமிறங்கி மக்களைத் திரட்டி போராடுவேன்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.