தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது. இருப்பினும், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுடைய இருப்பதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். டிசம்பர் 15ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, டிசம்பர் 13ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும், டிசம்பர் 14ம் தேதி தென்மேற்கு கடலின் மத்திய பகுதிக்கும், டிசம்பர் 15ம் தேதி தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்பவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.