உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் பிறந்த நாள் விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன் கூறியதாவது: விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள். அதற்காக, என்னுடைய பணியை நான் செய்கிறேன். கட்சியில் பொறுப்பு தேடி நான் வரவில்லை.
தந்தை விஜயகாந்த் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்திலோ அவரது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறோம்.
அதன்பிறகு, அவர் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார். மீண்டும் பழைய விஜயகாந்தை கம்பீரமாக பார்ப்பீர்கள். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்பார்.
இவ்வாறு விஜயபிரபாகரன் கூறினார்.