தமிழகம் முழுவதும் சாலைகளை மறித்தோ, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவோ கட் அவுட், பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தவும், இதற்கு உத்தரவாதம் அளித்து தமிழக அரசு எழுத்து மூலம் பத்திரம் தாக்கல் செய்யும்படியும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கட் அவுட், பேனர்களை உரிய அனுமதி பெற்று உரிய இடத்தில் தான் வைக்க வேண்டும் என்ற சட்டம் தமிழகத்தில் உள்ளது. ஆனால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இதனை சட்டை செய்வதாக தெரியவில்லை.
சமீபத்தில் சென்னையில் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சாலைகளில் ஏராளமான பேனர், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
சாலைகளில் கட் அவுட், பேனர் வைக்க நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் கட் அவுட், பேனர் தொடர்பான விதிமுறைகளை அரசு அதிகாரிகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளித்து அரசு தரப்பில் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யும் உத்தரவிட்டு விசாரனையை ஜன.4 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையில், விதி மீறி கட் அவுட், பேனர் வைக்கப்படுவதை தடுக்க முடியாத அரசு அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் கட்சிகளில் சேர்ந்து விடலாமே? என கடுமை காட்டி இருந்த நிலையில் இன்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.