சென்னை வண்ணாரப்பேட்டையில் 40 ஆண்டுகளாக வெறும் ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயசந்திரன் இன்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் ஜெயசந்திரன் (71). கடந்த 40 ஆண்டுகளாக வெறும் ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்ததால், இவருக்கு அஞ்சு ரூபா டாக்டர் என்ற பெயரும் உண்டு.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் டாக்டர் ஜெயச்சந்திரன்.
இந்நிலையில், டாக்டர் ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மரண செய்தி அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு பலர் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், கடந்த 47 ஆண்டுகளாக இலவச மருத்துவ சேவை செய்த சமூக சேவகர், 5 ரூபாய் மருத்துவர், மக்கள் மருத்துவர் என வட சென்னை மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்கள் மறைவு செய்தியை நம்ப முடியவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டிருந்தார்.