நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித் தவறிக்கூட பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தம்பிதுரை உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைவிடவும் கரூரைப் பற்றித்தான் அவர் அதிகம் கவலைப்படுகிறார் எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அதிமுகவினர்.
'நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கணக்கு ஆரம்பித்துவிட்டதா?' என்ற கேள்விக்குப் பதில் அளித்த தம்பிதுரை, `2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவை தனித்துத்தான் தேர்தலை சந்திக்கவைத்தார் ஜெயலலிதா. அவர் வழியை நாங்களும் பின்பற்றிவருகிறோம்' என்றார்.
டெல்லியில் கூட்டணி தொடர்பாக தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி பேசி வரும் நேரத்தில் இந்தக் கருத்தை மிக முக்கியமானதாகப் பார்க்கிறார்கள் அதிமுகவினர். அவரது கருத்து பற்றி பேசும் பொறுப்பாளர்கள், ' பிஜேபி கூட்டணியைப் பார்த்து திமுக எந்தளவுக்கு ஓடுகிறதோ அதே பயம் எங்களுக்கும் இருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் முதன்முதலாக தேர்தலை சந்திக்கப் போகிறோம்.
தனியாகப் போட்டியிட்டு வெல்வதற்கு அம்மாவால் முடியும். எங்கள் யாருக்கும் மக்களிடம் பெரிதாக செல்வாக்கு இல்லை. அரசு இயந்திரமும் பணமும் வைத்துக் கொண்டு எவ்வளவு ஓட்டுக்களை வாங்கிவிட முடியும்.
ஆகவே, எங்களுக்கு இணக்கமாக இருக்கக் கூடிய கட்சிகளோடு அணி சேரவே விரும்புகிறோம்.
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எங்களோடு பேச வந்தால் தயாராக இருக்கிறோம். விஜயபாஸ்கர் மீதான சிபிஐ விசாரணை, குட்கா விவகாரம், ஆர்கேநகர் பண விவகாரம் என மத்திய அரசில் உள்ளவர்கள் நெருக்குகிறார்கள். இதற்குப் பயந்து அதிமுக, பிஜேபி, பாமக, தேமுதிக ஆகிய அணிகள் ஓர் அணிக்குள் வந்தாலும் வரலாம்.
ஆனால், அப்படி எதுவும் அமைந்துவிடக் கூடாது என்பதில் தம்பிதுரை தெளிவாக இருக்கிறார். அவர் பயப்படுவது செந்தில்பாலாஜிக்குக்காக மட்டும்தான். கரூரின் வெற்றியை முடிவு செய்வது சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான். பிஜேபியோடு அதிமுக கூட்டணி வைத்தால் இந்த ஓட்டுக்கள் எல்லாம் திமுகவுக்குப் போய்விடும். அப்படியொரு சான்ஸை நாமே கொடுத்துவிடக் கூடாது எனப் பயப்படுகிறார் தம்பிதுரை. அதனால்தான், அம்மா வழியில் தனியாகவே போட்டியிடுவோம் என்கிறாராம்.