கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட ஹெச்.ஐ.வி ரத்தம்! கைதாகும் விஜயபாஸ்கர்?

HIV blood transfused to pregnant lady Vijayabaskar scammed the test tool

Dec 27, 2018, 16:24 PM IST

'விருதுநகர், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். 'முதல் நடவடிக்கையே அவர் மீதுதான் எடுக்கப்பட வேண்டும்' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது ரத்தம் குறைவாக இருப்பதால் புதிய ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதுதான், ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

எச்.ஐ.வி ரத்தம் எப்படி ஏற்றப்பட்டது என்பது குறித்து சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ரத்த வங்கி பொறுப்பாளர்கள், சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆய்வக நுட்பனர்கள் போன்றோரிடம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் விசாரணை நடத்தினார். இதில் தொடர்புடைய சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ' கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பான செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இதுகுறித்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் அவர்கள் விரும்பும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். குழந்தைக்கு நோய்த் தொற்று இல்லாதவாறு சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் ஒரு வருடத்தில் தனியார் மற்றும் அரசு ரத்த வங்கிகளில் 8 லட்சம் பேர் ரத்தம் வழங்குகின்றனர். அது நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. ஆனால், இதுவரை இதுபோன்ற புகார் வரவில்லை. இது மன்னிக்க முடியாத தவறு மிகுந்த மனவேதனை அளிக்கிறது' என்றார்.

இந்த சம்பவம் பற்றிப் பேசும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ' குருதிக் கொடை மூலம் பெறப்படும் ரத்தத்தை மூன்று வகை பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் மேலோட்டமான பரிசோதனை முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. பி.சி.ஆர் (Polymerase Chain Reaction) என்னும் பரிசோதனை எங்கும் நடத்தப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோய்க்கான பிரத்யேக பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் உட்படுத்தப்படாதால் ரத்தத்தில் எச்ஐவி பாசிட்டிவ் இருப்பதை தெளிவாகக் கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதற்குக் காரணமே, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் வாங்கப்பட்ட உபகரணங்கள்தான். எச்ஐவி பரிசோதனைக்கான எலிசா டெஸ்ட் கருவிகள் (Reading metre), பல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளது. இதற்குக் காரணமே, மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் பணிபுரியும் கொள்முதல் அதிகாரிகள்தான்.

அமைச்சரின் உதவியாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு ஏராளமான கருவிகளை வாங்கியுள்ளனர். இதில் தேவையில்லாத கருவிகளின் எண்ணிக்கைதான் அதிகம். உயிர் காக்கும் கருவிகள் இல்லாமல் பல மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் எச்ஐவி பரிசோதனைக்காக வாங்கப்பட்ட கருவிகள் எவ்வளவு? அதன் செயல்பாடு என்ன என ஜி.எச்சுகளில் ஆய்வு நடத்தினால் மொத்த ஊழலும் வெளியில் வரும்.

இதில், கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை ஆலோசகராகவும் சேவைப் பணிகள் கழகத்துக்கு அட்வைஸராகக் கொண்டு வந்துள்ளனர். ஆனந்தமான அந்த அதிகாரிதான் மொத்த கருவிகள் கொள்முதலுக்கும் ஏஜெண்ட். கர்ப்பிணி விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தினால் சுகாதாரத்துறையின் மொத்த ஊழலும் வெளியில் வரும். அதனால் நேரடியாக சம்பவ இடத்துக்கே சென்று அக்கறை காட்டுகிறார் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்' என்கின்றனர்.

-அருள் திலீபன்

You'r reading கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட ஹெச்.ஐ.வி ரத்தம்! கைதாகும் விஜயபாஸ்கர்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை