பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்பதற்கு இதுவரையில் உறுதியான தகவல் எதுவும் வெளியில் வரவில்லை. ஆனால், பாமகவுடன் சீட் பேரம் வெகுஜோராக நடந்து வருகிறதாம்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று முன்தினம் சந்தித்தனர் தமிழ்நாடு அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர். பாஜகவோடு கூட்டணி பேரம் பேசத்தான் இந்த சந்திப்பு நடந்தது.
பாஜகவுக்கு 15 சீட் வரையில் கொடுக்கவும் எடப்பாடியார் தயாராக இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிவில் 7 சீட்டைக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என தாமரைக் கட்சி பொறுப்பாளர்கள் கூறினர்.
நிர்மலா சந்திப்புக்குப் பிறகு பேட்டி கொடுத்த அமைச்சர் வேலுமணி, 14–வது நிதிக்குழு மானியத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை உடனே பெற்றுத்தருமாறு ராணுவ அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். கஜா புயலுக்கும் நிவாரண நிதியை உடனே அளிக்குமாறு கேட்டோம்.
நிதி கேட்க டெல்லிக்கு தொடர்ந்து வந்ததால்தான் 2 தவணைகள் வாங்க முடிந்தது. தேர்தல் கூட்டணி பற்றி முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் முடிவு எடுப்பார்கள். கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை' என்றார்.
அமைச்சர் இவ்வாறு கூறினாலும், தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி ஒன்றை அமைக்கும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறதாம். இதில் அன்புமணி ராமதாஸ் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.
காரணம், அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தருமபுரியில் 50 சதவீத வாக்குகளைப் பெற்று ஜெயித்துவிடலாம் என அவர் நினைக்கிறார். இதனை அடிப்படையாக வைத்து, எடப்பாடி பழனிசாமி அண்ட் கோவுடன் பேரம் பேசி வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, 'வடமாவட்டங்களில் 5 தொகுதி கொடுத்தால் போதும். உங்களோடு கூட்டணி அமைந்தால் எனக்கு ராஜ்யசபா சீட்டே வேண்டாம். லோக்சபா தேர்தலிலேயே ஜெயித்துவிடுவேன் எனக் கூறியிருக்கிறார் அன்புமணி.
பாமகவை சேர்த்துக் கொண்டால், அவர்களுக்கு செல்வாக்காக இருக்கக் கூடிய தொகுதிகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டியது வரும். அதனால் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என எடப்பாடியிடம் சிலர் பேசி வருகின்றனர். இதில், 5 சீட்டுகளுக்கு பாமக ஒத்துக் கொண்டதில் மகிழ்ச்சியோடு இருக்கிறார் எடப்பாடி. 'என்னை முதல்வர் என ஏற்றுக் கொண்டுதான் அன்புமணி நம்மிடம் வருகிறார். இனி மாற்றம், முன்னேற்றம் எனக் கிளம்ப மாட்டார்கள்' எனச் சொல்லி சிரித்தாராம்.
-அருள் திலீபன்