' சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய நேரிடும் என்பதால் தயங்குகிறார் ஆளுநர்' எனக் கூறியிருக்கிறார் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கான ட்விட்டர் பக்கத்திலும் எழுதத் தொடங்கியிருக்கிறார் அற்புதம்மாள். சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார் அற்புதம்மாள். விடுதலைக் கோப்பில் கையெழுத்திட தாமதத்துக்கான காரணம் கேட்டு பேரறிவாளன் கடந்த மாதம் 8-ந்தேதி அன்று புழல் சிறை மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு மனு அனுப்பினார்.
48 மணி நேரத்தில் தகவல் தரக் கேட்டு அனுப்பப்பட்ட அந்த விண்ணப்பத்துக்கு 48 நாட்களுக்குப் பிறகும் கவர்னர் மாளிகை தகவல் அதிகாரி பதிலளிக்கவில்லை. இதைப் பற்றிக் குறிப்பிட்டவர், ‘விடுதலைக் கோப்பு கையெழுத்தாகவில்லை. தினம் நம்பிக்கை, அவ நம்பிக்கைக்கு இடையே சிக்கிச் சாகிறேன். தாமதம் ஏன் என்று கேட்டு அறிவு ஒரு ஆர்.டி.ஐ அனுப்பினான். 48 மணி நேரத்தில் பதில் கேட்டு 48 நாளும் ஆகிவிட்டது. பதிலை காணோம். அரசியல் சட்டத்துக்குத்தான் மதிப்பில்லை. தகவல் அறியும் உரிமை சட்டமுமா செல்லாமல் போயிடும்?” எனக் கேட்டுள்ளார்.
கவர்னர் காலதாமதம் செய்வது ஏன் என பிஜேபி பொறுப்பாளர்களிடம் கேட்டோம். ' இதற்கு முக்கியக் காரணமே ஹெச்.ராஜா, கோவை எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பிரமுகர்கள்தான். இவர்கள் கவர்னரை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். 1998 பிப்ரவரி 14 அன்று அத்வானிஜி வந்தபோது நடந்த குண்டு வெடிப்பு கலவரத்தில் ஏராளமான இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இன்று வரையில் அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதேபோல், பூரிகமல் உள்பட இந்துத்துவ சகோதரர்களும் சிறையில் வாடுகின்றனர். முஸ்லிம்களை வெளியில் விடும்போது, குறைந்த அளவே இருக்கிற இந்துத்துவ நண்பர்களும் வெளியில் வருவார்கள்.
அதற்குப் பதிலாக இஸ்லாமிய கைதிகளை விடுவிக்காமல் இருப்பதே நல்லது. இதனால் இந்துத்துவா கைதிகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. தேச நலனுக்கு விரோதமாக கொடும் தண்டனை புரிந்த 20 ஆண்டுகளைக் கடந்த கைதிகளை வெளியில் விடாமல் இருக்கும் முடிவை எடுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பேரறிவாளன் உள்பட எழுவரின் விடுதலையும் பாதியில் நிற்கிறது' என்கின்றனர்.