திருவாரூர் இடைத்தேர்தலில் புதிய திருப்பமாக கட்சிகளிடையேயான போட்டி என்பது போய் இரு கோஷ்டிகளிடையேயான கேங் வாராக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் பகுதியில் மணல்மேடு சங்கர்- பூண்டி கலைச்செல்வன் இடையேயான மோதல் நாடறிந்தது. மணல்மேடு சங்கர், அதிமுக பிரமுகர்கள் கோவி. சம்பத், செந்தில்குமார் உள்ளிட்டோர் ஒரு கேங்காகவும் பூண்டி கலைச்செல்வன், முட்டை ரவி உள்ளிட்டோர் ஒரு கோஷ்டியாகவும் வலம் வந்தனர்.
2004-ம் ஆண்டு கோவி. சம்பத் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பத்தின் எதிரியான முட்டை ரவிக்கு பூண்டி கலைச்செல்வன் அடைக்கலம் கொடுத்திருந்தார். பூண்டி கலைச்செல்வன் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தது. ஒருகட்டத்தில் மணல்மேடு சங்கர், முட்டை ரவுடி ஆகியோர் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பூண்டி கலைச்செல்வன், மணல்மேடு சங்கர் கோஷ்டியால் 2007-ல் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அப்போது திருவாரூரில் அதிமுகவினர் வீடுகளை திமுகவினர் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு தகர்த்திருந்தனர். இந்த கோஷ்டி மோதல் தொடர்ந்து இப்போதும் நீடித்து வருகிறது.
தற்போது திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சுட்டுக்கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் கூட்டாளிகள். திமுக வேட்பாளராக பூண்டி கலைச்செல்வனின் சகோதரர் பூண்டி கலைவாணன் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி பூண்டி கலைவாணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் கோவி. சம்பத்தின் மனைவியை அதிமுக வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது திருவாரூர் வட்டார தகவல். அப்படி ஒரு நிலை உருவானால் கட்சிகளிடையேயான மோதல் என்பது கேங் வாராக திருவாரூரில் உருவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது.