ஸ்டெர்லைட் விவகாரம் - சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு!

DMK walked out of Assembly Sterlite issue

by Nagaraj, Jan 8, 2019, 15:32 PM IST

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் முதலமைச்சர் பழனிச்சாமி தனது பதிலுரையில் அரசு கொள்கை முடிவு எடுப்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என அதிருப்தி தெரிவித்து சட்டப் பேரவையிலருந்து மு.க.ஸ்டாலினும், திமுக எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் தனது பதிலுரையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று அறிவிப்பார் என எதிர் பார்த்தோம். ஆனால் பதிலுரையில் கடைசி வரை அறிவிக்காதது ஏமாற்றம் அளித்தது என்றார்.

கடந்த 2-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்தது. இதனால் பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

திராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு”வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது குறித்து சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:

“முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு”வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது சமூக நீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதும் அதை நாசப்படுத்திடக் கூடியதுமான செயலாகும்.

மத்தியஅரசின் இந்த முடிவு நீதிமன்றப் பரிசீலனைக்கு முன் நிச்சயமாக நிற்காது. அரசியல் சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின்படி “சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு”என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு” என்பது  அரசியல்சட்டத்திற்கு எதிரானது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இதே அவையில்,12.5.1989 அன்று முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி - அதன் அடிப்படையிலும், கலைஞர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையிலும், அன்றைக்கு பிரதமராக  இருந்தசமூக நீதிக்காவலர் திரு வி.பி.சிங் அவர்கள் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வரலாறு படைத்தார்.

அதைஅடுத்து, திமுகழகமும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று,  மாண்புமிகுஅமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களின் முயற்சியினால் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வேலை வாய்ப்புகளில், இட ஒதுக்கீடு மத்திய அரசு அலுவலகங்களில் இதுவரை முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை வஞ்சித்து வருகிறது. 25 வருடங்களுக்கு மேலாகியும் க்ரூப் “ஏ”பிரிவில் 17 சதவீதமும், க்ரூப் “பி”பிரிவில் 14 சதவீதமும், க்ரூப் “சி”பிரிவில் 11 சதவீதமும், க்ரூப் “டி”பிரிவில் 10 சதவீதமும் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மண்டல் கமிஷன் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல - மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு என்று கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட பெஞ்ச் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தைச்சேர்ந்த மாண்புமிகு நீதியரசர் மறைந்த ரத்னவேல் பாண்டியன் அவர்கள், “பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது”என்று தீர்ப்பளித்துள்ளார்.  உச்சநீதிமன்றநீதிபதி திரு பி.பி. ஜீவன்ரெட்டி அவர்கள், “சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிட கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. ஆகவே ஒருவரின் வருமானம் அல்லது சொத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது”என்று தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

ஆகவேஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக, அரசியல் சட்டத்திற்கு மாறாக இப்படியொரு இட ஒதுக்கீட்டை,  வரும்நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொண்டுவந்து மத்திய பாஜக அரசு, பணியில் சேரும் “உரிமை வழங்கப்பட்ட”பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் வாழ்வுடன் விபரீத விளையாட்டைத் துவக்கியிருக்கிறது.

ஆகவே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும்  தமிழகத்திலிருந்துமுதல் எதிர்ப்புக்  குரல்ஆணித்தரமாக ஒலிக்க வேண்டும். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கர்மவீரர் காமராஜர் ஆகியோர் பண்படுத்தித் தந்த வழியில், சமூக நீதியின் நாற்றங்காலாகத் தொடர்ந்து இருந்துவரும் தமிழகத்தின் இந்த சட்டமன்றத்திலிருந்து சமூக நீதியின் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க எண்ணும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை இந்த அவையில் இன்றே நிறைவேற்றிட வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்பேசினார்.

You'r reading ஸ்டெர்லைட் விவகாரம் - சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை