முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சர்ச்சையில், அடுத்த அதிரடியை வீசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. `பாஜக வகுத்த பாதையில் காங்கிரஸ்,இடது சாரிகள்?' என்ற தலைப்பில் கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.
பத்து சதவீத இடஒதுக்கீடு குறித்துப் பேசும் வன்னியரசு, 'முன்னேறிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் அதிமுக உறுப்பினரும் மூத்த தலைவருமான தம்பிதுரை கடுமையாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினார்.
ஆனால், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போல பாட்டாளி மக்கள் கட்சியின் ஒற்றை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூட எதிர்த்து வாக்களிக்காமல் வெளியே ஓடிவிட்டார்.
வெளியே பேசுவது சமூகநீதி, ஆனால் சட்டமியற்றும் அவையில் பாஜகவோடு மறைமுக கூட்டு சேர்ந்து சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். ஏற்கனவே, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகத்தை ஆதரித்து பேசியவர்தான் அன்புமணி.
(முதலில் அன்புமணிக்கு யாராவது சமூகநீதி தொடர்பாகவும் சனாதனம் தொடர்பாகவும் வகுப்பெடுத்தால் நல்லது) இது இப்படி இருக்க, மாநிலங்களவையில், இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக திமுக உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் கடுமையாக பேசினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க கேட்டுக்கொண்டார்.
ஆனால்,கனிமொழியின் குரல்அங்கு எடுபடவே இல்லை.
அதை விடக்கொடுமை, இடதுசாரிகள் தமக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில், மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினரான டிகே.ரங்கராஜன் அவர்கள் மசோதாவை ஆதரித்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஆம் ஆத்மி கட்சியுமே கனிமொழியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றது. சமூக நீதிக்கொள்கையை குழிதோண்டி புதைக்கவும் இட ஒதுக்கீட்டுக்கொள்கையையே அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபடும் பாஜகவின் சதித்திட்டத்தை மார்க்சிய கம்யூனிஸ்டுகளும் ஆதரிப்பது எதிர்காலத்துக்கு ஆபத்தானதாக அமைந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியும் பாஜகவோடு இணைந்து இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்து விட்டது. இப்போது, பாஜக வகுத்தளித்த பாதையில், காங்கிரஸ் கட்சியும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியும் பயணிப்பது சனநாயகத்துக்கும் அரசியலமைப்புச்சட்டத்துக்கும் பேராபத்தாக அமைந்து விட்டது. பொருளாதாரக்கொள்கைகளும் சமூகநீதிக்கொள்கைகளும் பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்கும் ஒன்றுதானா? மாற்றுக்கொள்கைகள் இல்லையா? வர்க்க பார்வையும் வருணபார்வையும் ஒன்றாக இருக்கிறதே!' எனக் கூறியிருக்கிறார்.