இயக்குனர் களஞ்சியத்தின் செயல்பாடுகளால் கொதிப்பில் உள்ளனர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர். சமீபத்தில் புழல் சிறைக்குச் சென்ற களஞ்சியம், அங்கு செய்த அலப்பறைகளால் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர் முருகன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்குத் தொடர் அழுத்தங்கள் தரப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர், இதுவரையில் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்தநிலையில், புழல் சிறையில் இவர்களைச் சந்திக்கச் செல்வதற்கு முன்னால், ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் களஞ்சியம்.
அந்தப் பதிவில், ' தோழர்களே வணக்கம். நாளை (9-01-2019) காலை 10-மணியளவில் சென்னை புழல் சிறையில் பேரறிவாளன், ராபட் பயாஸ் இருவரையும் சந்தித்து எழுதமிழர் விடுதலையை வலியுறுத்தும் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து பேச இருக்கிறோம். பேரறிவாளன், இராபட் பயாஸ் இருவரையும் சந்தித்து விட்டு வந்து எழுதமிழர் விடுதலைக்கான எங்களது அதிரடியான நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க இருக்கிறோம்.
ஆகவே ஊடகத்துறை நண்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார். அதிரடியான நடவடிக்கைகள் என அவர் பதிவு செய்திருந்ததைக் கவனித்த கியூ பிரிவு அதிகாரிகள், சிறைத்துறைக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை அன்று மனு போட்டு பார்க்க வந்த களஞ்சியத்திடம், உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளனர் சிறைக் காவலர்கள்.
என்ன காரணத்திற்காக பார்க்க முடியாது, வழக்கமாக சந்திப்பதுதானே. புதிதாக ஏன் இந்த கட்டுப்பாடு. கண்காணிப்பாளரைப் பார்க்க வேண்டும், ஜெயிலரை சந்திக்க வேண்டும் என சத்தம் போட்டிருக்கிறார். அவரது கத்தலை சிறை அதிகாரிகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள களஞ்சியம் ஆதரவாளர்கள், ஏன் இந்த புறக்கணிப்பு- இருட்டடிப்பு என தெரியவில்லை.
என்னமோ ஒரு புது நாடகத்தை நடத்தப்போகிறார்கள், அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்குமோ?' எனத் தகவல் வெளியிட்டுள்ளனர்.
- அருள் திலீபன்