இங்கிலாந்து தொழிலதிபரை மணக்கும் டென்னிஸ் வீராங்கனை...!

Advertisement

உலக டென்னிஸ் போட்டியில் கிளாமர் வீராங்கனையாக வலம் வந்த ரஷ்யாவை சேர்ந்த மரிய ஷரபோவா இங்கிலாந்தை சேர்ந்த 41 வயதான அலெக்சாண்டர் ஜில்க்ஸ் என்ற தொழிலதிபரை மணக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அலெக்சாண்டருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை டென்னிஸ் ரசிகர்கள் மறந்தாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அதற்குக் காரணம் உண்டு.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளிக்கும் போது, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்டபோது, டெண்டுல்கரா? யார் அவர்? தனக்கு டெண்டுல்கர் என்றால் யார் என்றே தெரியாது என்று கூறினார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மரிய ஷரபோவாவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரது பேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

இதன் பின்னர் தான் சச்சின் டெண்டுல்கர் என்றால் யார் என்று அவருக்கு தெரியவந்தது. 33 வயதான மரிய ஷரபோவா கடந்த பிப்ரவரி மாதம் தான் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார். ரஷ்யாவைச் சேர்ந்த இவர், டென்னிசில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். 2004ல் தன்னுடைய 17வது வயதில் விம்பிள்டனில் வெற்றி பெற்ற பின்னர் தான் டென்னிஸ் உலகில் இவர் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கினார்.விம்பிள்டனில் வெற்றி பெற்ற அடுத்த வருடமே இவர் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக மாறினார். 2007 ல் இவர் அமெரிக்க ஓபன் போட்டியில் வென்றார்.

இந்நிலையில் 2007ம் ஆண்டு ஷரபோவாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் 2008ல் ஆஸ்திரேலிய ஓப்பனிலும், தொடர்ந்து 2012ல் பிரெஞ்சு ஓப்பனிலும் வெற்றி பெற்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை இவர் பெற்றார். இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறும் 10வது வீராங்கனையாக ஆனார். லண்டன் ஒலிம்பிக்கில் இவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்நிலையில் 2016ம் ஆண்டு, தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்தியதாகக் கூறி ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்பின்னர் 2017ல் இவர் மீண்டும் விளையாடத் தொடங்கிய போதிலும் அவரால் முன்னர் போல் சிறப்பாக விளையாட முடியவில்லை. நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்த இவர் கடைசியில் 373 வது நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தற்போது ஷரபோவா திருமணம் செய்யத் தீர்மானித்துள்ளார். 2018 அக்டோபர் மாதத்தில் தான் ஷரபோவாவும், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான அலெக்சாண்டர் ஜில்க்சும் காதலிக்கும் விவரம் வெளி உலகிற்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. பிரபல பிரிட்டிஷ்-பஹ்ரைன் பேஷன் டிசைனரான மிஷா நோனு தான் இவரது முதல் மனைவி ஆவார். அலெக்சாண்டருடன் நிச்சயதார்த்தம் நடந்த விவரத்தை ஷரபோவா தான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>