தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்காக அமெரிக்காவின் மினசோட்டாவில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்கள்!

தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இடையூறாக இருக்கும் பல்வேறு பிரச்னைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அந்த வகையில், ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

அப்போது, தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில், அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி உறுதிமிக்க குரலை வெளிப்படுத்தி தமிழர்தம் பாரம்பரியத்தைக் காக்க உறுதுணையாக இருந்தனர். இறுதியில் அந்தப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

அதேபோல, தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக “சேவ் தமிழ்நாடு அண்டு தமிழ்ஸ்“ (Save Tamilnade and Tamils) என்று கூறி, “தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு மினசோட்டாவின் குரல்” என்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நெடுவாசலைக் காப்பாற்றுவது, ராமேஸ்வரம் மீனவர்கள் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு, மணல்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நீதி கேட்கும் விதமாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் 8 அமெரிக்க நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 - thesubeditor.com

Advertisement