லோகேஷ் ராகுல் அடித்த அதிவேக அரை சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2018 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர் டேவில்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கியது.
கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கிய கவுதம் கம்பீர் இந்த ஆண்டு டெல்லி அணிக்கு சென்றுள்ளார். அதே சமயம், ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்முறையாக கொல்கத்தா அணி கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கேப்டன் கவுதம் கம்பீர் 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிஷப் பாண்ட் 13 பந்துகளில் 28 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 16 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 14 பந்துகளில் அரைச்சதம் விளாசி ஐபிஎல் வரலாற்றி அதிவேக அரைச் சதத்தை பதிவு செய்தார். இதனால், பஞ்சாப் அணி 6 ஓவர்களிலேயே 73 ரன்கள் குவித்தது.
ஆனால், அதன்பின் களமிறங்கிய யுவராஜ் சிங் ரசிகர்களின் பொறுமையை சோதித்தார். டெஸ்ட் போட்டி போன்று மெதுவாக ஆடினார். மறுபுறம் கருண் நாயர் சிறப்பாக ஆடினார். ஒருவழியாக யுவராஜ் சிங் 22 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கருண் நாயர் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசியில் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், ஸ்டோனிஸ் இணை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகன் விருது லோகேஷ் ராகுலுக்கு வழங்கப்பட்டது.